Pages

Sunday, September 5, 2010

TEACHERS' DAY - SEPTEMBER 5

நாம் ஏன் "Teachers' Day" என்பதை "ஆசிரியை மற்றும் ஆசிரியர் தினம்" என்று சொல்வதில்லை?

"ஆசிரியர்" என்கிற தமிழ்ச் சொல் "ஆசிரியை/ஆசிரியர்" என்கிற இருவரையும் குறிக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து தெளிவு படுத்தவும்.

இந்தப் பதிவிற்கு:
ஆசிரியர் = ஆசிரியர்கள்/ஆசிரியைகள்
மாணவர்கள்  = மாணவர்கள்/மாணவிகள்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில(?) ஆசிரியர்கள் மட்டும் மறக்க முடியாதவர்கள்.  நாம் எல்லா ஆசிரியர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை அல்லது நினைவில் வைக்க முயற்சிப்பதில்லை. அப்படியே நினைவில் இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தில் நாம் அவர்களைப்   பற்றி நினைப்பது அல்லது அவர்களை சந்தித்துப் பேசுவது என்பது, நம்மில் பலருக்கும் மிகவும் அரிதான நிகழ்வு. 

எனது கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். என்னால் எல்லா நிகழ்வுகளையும் நினைவில் கொண்டு வர முடியவில்லை.  அதே சமயம் சில விஷயங்களை மறக்கவே முடிவதில்லை.

என்னால் மறக்க முடியாத ஆசிரியை "ரம்பா டீச்சர்".  நாங்கள் "ரம்பா ஆசிரியை" என்று அழைத்ததாக நினைவில் இல்லை. எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை.

எங்கள் வகுப்பில் உள்ள அனைவரின் கையெழுத்தையும் திருத்தியவர்.  எங்கள் எல்லோரையும் "கல் சிலேட்டு"  வாங்க வைத்து, அதில் ஆணியை வைத்து இரண்டு கோடுகள் மற்றும் நான்கு கோடுகள் அவரே போட்டு, எழுத கற்றுக் கொடுத்தார். அவர் சொல்லியவாறு எழுதவில்லை என்றால் கை-முட்டியில் அடி விழும். ஐந்தாம் வகுப்பில் எத்தனை முறை அடி வாங்கினேன் என்று ஞாபகம் இல்லை. நிச்சயமாக காலாண்டு தேர்வு வரை அடி, அதிகமாக வாங்கியதாக ஞாபகம்.

கணிதம் மிக நன்றாக சொல்லிக் கொடுத்தார். மற்ற பாடங்கள் அதிகமாக நினைவில் இல்லை. நான் படித்த காலத்தில் நிச்சயமாக அவர், என் பள்ளியின் மிகச் சிறந்த ஆசிரியை.  ஆனால் இவரது வகுப்பிலும் நாங்கள் கேள்விகள் அதிகம் கேட்கவில்லை. பயமும் ஒரு காரணம். கேள்வி கேட்டு, புரிந்து படிப்பதை கற்றுக் கொடுக்காததும் அல்லது கற்றுக் கொள்ளாததும்  ஒரு காரணம்.   இந்த முறை ஊருக்குச் செல்லும் பொழுது இவரை சந்திக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுக் கொடுப்பது என்பதும் சுலபமான ஒன்றல்ல. நிச்சயமாக மிகவும் Challenging ஆன ஒரு வேலை.  அதுவும் ஒரே ஆசிரியர், சாதாரணமாக 40 முதல் 60 மாணவர்களை  வழி நடத்துவது என்பது கடினமான ஒன்று. 

சில ஆக்க (?) பூர்வமான யோசனைகள்:

1. ஆசிரியர் - மாணவர்கள் விகிதத்தை 1 : 20 அல்லது 1 : 15 ஆக மாற்ற ஆக்க பூர்வமான முயற்சிகளை மாநில/மத்திய (நடுவண்) அரசுகள் எடுக்க வேண்டும்.

2. ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தல். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.

ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? (Ideal Teacher ?)
            அன்பு - மாணவர்களின் பயத்தை போக்குதல்.
            பண்பு - நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தல், தானும் கடைப்பிடித்தல்.
            கற்றுக் கொடுக்கும் ஆர்வம்.
            புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம்.
           கேள்வி கேட்கும் திறனை மாணவர்களிடம் ஊக்கப் படுத்துதல்.
           புதிய முறைகளில் கற்றுக் கொடுத்தல்.
           மாணவர்களிடம் உள்ள தனித்திறனை அறிந்து, அதை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகளை பயிற்றுவித்தல்
           மாணவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளல்

நான் திருச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது பக்கத்து வகுப்பு ஆசிரியர் TMT  சார். நான் அவரிடம் சிறப்பு வகுப்பில் (Tuition) படித்தேன். எனது Ideal Teacher .  என்னை பத்தாம் வகுப்பு முதல் வழி நடத்தியவர்.  இன்று காலை அவரிடம்
அலைபேசி-யில் பேச வேண்டும். இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. .......அடுத்த பதிவில்...

பின் குறிப்பு:
இந்தியாவில் TEACHERS' DAY சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடப் படுகிறது.  இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://en.wikipedia.org/wiki/Sarvapalli_Radhakrishnan
உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Teachers'_Day

1 comment: