Pages

Saturday, February 4, 2012

வேதம் புதிது - இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

வேதம் புதிது படம் - இன்று மீண்டும் பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை பார்த்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் சில வசனங்கள் நெற்றிப் பொட்டில் அடித்தது போல இருக்கிறது.

வசனம் எழுதியவர்: கண்ணன்
இயக்குனர்: பாரதிராஜா 
இசை: தேவேந்திரன்

ஒரு படத்தினால் என்ன மாற்றம் நடக்க முடியும் என்று சிந்தித்தால், நிச்சயமாக இந்தப் படத்தினால் ஒரு சில மனிதர்களிடம், ஒரு சில மாற்றங்களாவது வந்து இருக்கும்.

ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதும் என்னை மறக்கிறேன். என்னை அழ வைக்கிறது. என்னுள் எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒட்டிக் கொண்டு இருக்கின்ற, சாதி என்கிற எண்ணம் என்னை விட்டு முழுமையாக மறைய துணை செய்கிறது. சாதி மட்டும் அல்ல வேறு சில சொல்ல தெரியாத மாற்றங்களையும்  ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் சில நச் வசனங்கள்: (வார்த்தைகள் மாறாமல் அப்படியே எழுத முடியவில்லை. தயவு செய்து படத்தைப் பார்க்கவும்.)

  • சாதி இல்லை, சாதி இல்லை என்று சொல்கிற நீங்களே, ஒவ்வொரு முறையும் உங்கள் பேரைச் சொல்லும் பொழுது, பாலுத் தேவர், பாலுத் தேவர் என்று சொல்றேளே, பாலுங்கிறது உங்க பேர்! தேவர்ங்கறது நீங்க படித்து வாங்கின பட்டமா? 
  • நான் கரை ஏறிட்டேன்! நீங்க எப்ப ஏறப் போறேள்?
  • அக்ராஹாரத்துப் பையனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர எத்தனை நேரம் யோசிச்சீங்க? ஒரு நிமிடத்துல முடிவு எடுத்து கூட்டிட்டு வரல? இப்ப சைவ உணவுக்கு மாறுவதற்கு மட்டும் என் இவ்வளவு யோசனை? மனுசன்னா ஒரு வைராக்கியம் வேணாம்? 
  • பாலு என்கிற மனுஷன் வைதேகி என்ற பெண்ணையும் சங்கரன் என்கிற பையனையும் தன் பொண்ணு, பையனா வளர்க்க ஆசைப் படறான். இதுல சாதி எங்கயா உள்ள வந்தது? 

சிறிது சிந்தனை செய்தால், சாதி என்கிற ஒரு வட்டத்தால், நமது சமூகத்தில் பிரச்சனைகள் தான் அதிகம்.

நமது அடிப்படை நம்பிக்கைகளைக் கூட அவ்வப் பொழுது கேள்வி கேட்டு சரி பார்க்க வேண்டும்.  ஏனெனில் நமக்குத் தெரியாமலே சில அடிப்படை எண்ணங்கள், நம்பிக்கைகள் ஆணித்தரமாய்ப் பதிந்து இருக்கும். சில எண்ணங்கள் முற்றிலும் தவறானவையாக இருக்கக் கூடும்.

நமது சைக்கிள் அல்லது மற்ற வண்டிகளுக்கு, டயரின் காற்றை  எப்படி அவ்வப் பொழுது சோதனை செய்து தேவையான அளவு ஏற்றிக் கொள்கிறோமோ, அதே போல நம் எண்ணங்களையும் வாரம் ஒருமுறை, தினமும் ஒருமுறை சரி செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கிக் கொள்கிறான். எனது ஊர், எனது சாதி, எனது மதம், எனது நாடு, எனது மாநிலம் என்று எல்லையே இல்லாமல், நாம் நமது எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறோம் (சிக்கிக் கொண்டிருக்கிறோம்?).

எல்லைகள் தேவையா? தேவை இல்லையா? தெரியவில்லை. சில நேரங்களில் எல்லைகள் தேவைப் படுகின்றன. சில நேரங்களில் எல்லைகள், தொல்லையைத் தருகின்றன.

சக மனிதனையும் பிற உயிரினங்களையும் நேசிப்போம். அன்போடு, உயிர்ப்போடு வாழ்வோம்.


No comments:

Post a Comment